டெல்லி: ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் 2ஆவது கட்டமாக புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இன்று (நவம்பர் 22) வழங்கினார். அப்போது பிரதமர் உரையாற்றுகையில், இந்தியாவின் 45-க்கும் அதிகமான நகரங்களில் 71,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் ஏராளமான குடும்பங்கள் மகிழ்ச்சியடையும். நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க இயக்கமுறையில் மத்திய அரசு செயல்பட்டுவருகிறது.
நாட்டின் மிகப்பெரிய பலமாக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். தேச கட்டமைப்புக்காக இளைஞர்களின் திறமையையும், சக்தியையும் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள் தங்களின் கடமைகளை செய்யும் போது திறன் கட்டமைப்பில் நிலையான கவனத்தை செலுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் துறையில் புதிய வேலைகளுக்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களின் சொந்த நகரங்களிலும், கிராமங்களிலும் இத்தகைய வாய்ப்புகள் உருவாகி வருவது முக்கியமானது. இது இளைஞர்கள் புலம் பெயரும் நிர்ப்பந்தத்தை குறைத்துள்ளது. தங்கள் பகுதியில் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை செய்ய முடிந்துள்ளது. இளைஞர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை 80,000 ஸ்டார்ட் அப்கள் வழங்கியுள்ளன.
மருத்துவம், பூச்சி மருந்து தெளித்தல், ஸ்வமித்வா திட்டத்தில் வரைபடம் தயாரித்தல், பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மீது உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இது நாட்டை உலகலாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற பாதை அமைக்கும். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குஜராத் தேர்தலில் வெற்றியா..? புதிய சாதனையா..? மோடியின் அரசியல் கணக்கு என்ன..?