பெங்களூரு (கர்நாடகா): கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உத்தரவாதங்களுடன் இன்று மதியம் 12 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
சித்தராமையாவிற்கு இது 14வது பட்ஜெட் தாக்கல் ஆகும். இந்த பட்ஜெட்டின் மதிப்பு ரூ.3.30 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. 9 மாதங்களுக்கான இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முதலமைச்சர் சித்தராமையா, இதற்காக கடந்த 25 நாட்களாக துறை வாரியாக பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார்.
இந்த பட்ஜெட்டில் பெரும்பாலான தொகை, முந்தைய பசவராஜ் பொம்மை அரசால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தை மறுபகிர்வு செய்வதற்காக செலவிடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நிபுணர்களின் கூற்றுப்படி, சுமார் 60,000 கோடி ரூபாய் தேவை.
இந்த நிதியாண்டிலேயே ஐந்து உத்தரவாதங்களுக்காக ரூ.30,000 கோடி செலவழிக்கப்படும் என கூறப்படுகிறது. பிப்ரவரியில் பாஜக அரசு ரூ.3,09,182 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த நிலையில், தற்போது 3.30 லட்சம் கோடிக்கு புதிய பட்ஜெட்டை முதலமைச்சர் சித்தராமையா தற்போது தாக்கல் செய்ய உள்ளார். மேலும், முந்தைய பொம்மை அரசை விட தற்போது தோராயமாக ரூ.25,000 கோடி அளவில் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாக்குறுதியில் தெரிவித்த ஐந்து திட்டங்களை நிறைவேற்ற நிதி திரட்டுவதற்காக முதலமைச்சர் சித்தராமையா கூடுதலாக கடன் வாங்குவாரா அல்லது பழைய திட்டங்களுக்கான நிதியை குறைப்பாரா அல்லது வரியை உயர்த்துவாரா என அரசியல் வல்லுநர்கள் உள்பட பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
முந்தைய அரசு தாக்கல் செய்த 2023 - 2024 பட்ஜெட்டில், தோராயமாக ரூ.77,750 கோடி கடன் வாங்குவதாக கூறியிருந்தது. மேலும் 9 மாத புதிய பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்தராமையா அதிகளவில் கடன் வாங்குவது சந்தேகம்தான் என நிதித்துறை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. அப்படியே கடன் வாங்கினாலும், ரூ.80 ஆயிரம் கோடி வாங்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
முதலமைச்சர் சித்தராமையாவின் பட்ஜெட்டில் அறிவிக்க ஐந்து உத்தரவாதங்கள் முக்கிய அம்சமாக இருப்பதால், அவரது பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. ஐந்து உத்தரவாதங்களுக்கான நிதியை ஏற்பாடு செய்வதற்காக ஏற்கனவே உள்ள சில திட்டங்களுக்கான நிதியை முதலமைச்சர் சித்தராமையா குறைத்தாலும், விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்கள் மற்றும் வித்யாநிதி திட்டம் அப்படியே தொடரும் என கூறப்படுகிறது.
சித்தராமையாவின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள்:
- பட்ஜெட் அனைத்து தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், நெசவாளர்கள், பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு நன்மை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
- பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், இளம் பெண்கள், மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் இடம் பெற வேண்டும்.
- இந்திரா கேன்டீனுக்கு மானியம் அறிவிக்கப்பட வேண்டும்.
- சிறுபான்மைத் துறைக்கு அதிக மானியம் ஒதுக்க வேண்டும்.
- வறட்சி மேலாண்மை, குடிநீர் திட்டங்களுக்கு அதிக மானியங்கள் ஒதுக்க வேண்டும்.
- பெங்களூரு உள்கட்டமைப்புக்கு அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- நீர்ப்பாசன திட்டங்களுக்கான மானியங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலோனோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.