கொல்கத்தா : டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் ட்விட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ், “மத்திய அரசின் முடிவை வரவேற்கும் அதே வேளையில், நேதாஜியின் அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய சித்தாந்தத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
நேதாஜிக்கு பிரமாண்ட சிலை
இது குறித்து மேலும் அவர், “இந்தியா கேட்டில் நேதாஜியின் பிரமாண்ட சிலையை நிறுவ நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்த முடிவை வரவேற்கிறேன். அதே நேரத்தில் நேதாஜியின் உண்மையான அஞ்சலியை மத்திய அரசு அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய அவரது சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் அது சாத்தியமாகும்.
இந்த செயல்பாட்டில் அனைத்து மதங்களையும் சேர்ப்பதில் நேதாஜி எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தார். உண்மையில், அவர் ஆசாத் ஹிந்த் பாஜ் (Azad Hind Fouj ) மற்றும் ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தை அந்த உள்ளடக்கிய அரசியலின் அடிப்படையில் நடத்தினார். நாம் அந்த முன்மாதிரியைப் பின்பற்றி, நாட்டில் தற்போது நிலவும் கருத்து வேறுபாடு மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராகப் போராட வேண்டும்.
ஆசாத் ஹிந்த் பாஜ்
நேதாஜியின் ஆசாத் ஹிந்த் பாஜ்-இன் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஷா நவாஸ் கான் ஒரு முஸ்லீம் ஆவார். உண்மையில், 1941ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள எல்ஜின் ரோடு வீட்டில் வீட்டுக் காவலில் இருந்த நேதாஜி இஸ்லாமியர் ஒருவரின் வேடமிட்டு ஆங்கிலேயருக்கு எதிரான தகவல் ஒன்றை கடத்தினார்.
நேதாஜியை இந்தியா தனது மண்ணில் பார்த்த கடைசி நாள் அது. அவரது மருமகன் சிசிர் போஸின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் செல்வது அவரது திட்டம். உன்னிப்பாகத் திட்டமிட்டு, நேதாஜி தப்பிப்பதற்கு பல நாள்களுக்கு முன்பே தாடியை வளர்த்தார். அன்று, நேதாஜி, முகமது ஜியாவுதீன் போல் மாறுவேடமிட்டிருந்தார்.
கடைசி பயணம்
கறுப்பு ஆடை அணிந்த நேதாஜி பின் இருக்கையில் அமர்ந்தார் ஆனால் கதவை மூடவில்லை. நேதாஜியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வாகனத்தில் ஒருவர் மட்டுமே ஏறியதாகக் கருதும் வகையில் சிசிர் டிரைவரின் கதவைத் தட்டினார். இரண்டாம் உலகப் போரின் போது, நேதாஜி ஜெர்மனியில் இருந்து புறப்பட்டு, ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் வரை பயணம் செய்தார்.
அந்த ஆபத்தான பயணத்தில், அவரது உதவியாளராக இருந்தவர் ஒரு முஸ்லீம். அவர் பெயர் அபித் ஹாசன். இறுதியாக, 1945 மே மாதம் சைகோன் விமான நிலையத்தில் இருந்து கடைசி மர்மமான விமானத்தில், அவர் காணாமல் போனார் அல்லது அந்த விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
இஸ்லாமியர்களுடன் உறவு
அப்போது நேதாஜியின் தோழராக மீண்டும் ஒரு இஸ்லாமியர் இருந்தார். அவர் பெயர் ஹபிபுர் ரஹ்மான். மேலும், நேதாஜி முதலில் அனைவரும் இந்தியர்கள் என்பதை தேசத்திற்கு கற்பித்தார். எனவே நாட்டின் இளைய பிரிவினர் இந்தத் திசையில் வழிநடத்தப்படாவிட்டால், நாட்டில் மற்றொரு பிளவை தவிர்க்கலாம். ஆகவே, பிரதமர் அனைவரையும் உள்ளடக்கிய அரசியலை மேற்கொள்ள வேண்டும், அதுவே நேதாஜிக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்” என்றார்.
மேலும், “பாஜக இந்த மதத்தை உள்ளடக்கிய அரசியலை ஏற்று, அதைத் திறம்பட நாட்டில் நடைமுறைப்படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, “நேதாஜி இந்தியாவிற்கு திரும்பி வந்திருந்தால், வங்காளப் பிரிவினை நடந்திருக்காது. எனவே, நேதாஜியின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதுதான் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரே வழி’’ என்றார்.
சந்திர குமார் போஸ்
சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜியின் மூத்த சகோதரருமான சரத் சந்திர போஸின் மகனான சந்திர குமார் போஸ் எப்போதும் பாஜகவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலில் அவர் தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதற்கு முன், 2016 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பாபானிபூர் சட்டசபை தொகுதியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து, சந்திர குமார் போஸ் போட்டியிட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : வரலாற்றின் ஒழுங்கின்மையை சரிசெய்யும் நேதாஜி!