டெல்லி சட்டப்பேரவை அமைதி, நல்லிணக்க குழுவினர் பேஸ்புக்கில் ஒருசாராருக்கு எதிராக வரும் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த முடிவுசெய்தனர். இதுதொடர்பாக பேஸ்புக் முன்னாள் ஊழியர் ஒருவர் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆமி ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா தலைமையிலான பேரவைக் குழு முன், இணைய வழியாக பேஸ்புக் நிறுவனத்தின் முன்னார் ஊழியர் மார்க் லூகி ஆஜரானார்.
அப்போது, அவர் கூறுகையில், "அரசிலும், அரசியலிலும் வலுவான தொடர்பு உள்ளவர்களுக்கே பேஸ்புக் நிறுவனத்தில் உயர் பதவிகள் அளிக்கப்படுகின்றன. உயர் அலுவலர்கள் அழுத்தத்தால் பேஸ்புக்கில் வெளியாகும் பல்வேறு சமுதாயத்தின் நெறிமுறைகளில் சமரசம் செய்ய வேண்டியதாக இருக்கிறது.
டெல்லி கலவரம், மியான்மர் இனப்படுகொலை, இலங்கை இனவாத வன்முறை போன்ற நிகழ்வுகளில் பேஸ்புக் முன்கூட்டியே விரைவாகச் செயல்பட்டிருந்தால் எளிதாகத் தவிர்த்திருக்க முடியும்.
இதுகுறித்து பேஸ்புக் சிஇஓவுக்கு நன்கு தெரியும். ஆனால், அரசியல் தலையீடு இல்லாத மாதிரி உலகிற்கு பேஸ்புக் காட்டிவருகிறது" எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இவர் பேஸ்புக்கில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு முக்கியக் குழுக்களில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.