டெல்லி: அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் பெங்களூரு மற்றும் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டமும், டெல்லியில் ஆளுங்கட்சியான பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டன.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாட்னாவில் நடத்திய முதல் கூட்டத்தில் 17 கட்சிகள் பங்கேற்ற நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட கூட்டத்தில் 25 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (INDIA) எனவும் பெயர் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில் மும்முரமாக இருக்கும் பாஜக கூட்டணி கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உட்பட 38 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கரோனா தொற்று காலத்தில் உலகின் பல நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சியைக் கண்டுள்ளது. மோடியின் தலைமையில் உலகம் முழுவதும் தேசத்தின் நற்பெயர் வளர்ந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி பெறும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பேதங்கள் கிடையாது. அனைத்து கட்சிகளுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் கூட்டணி செயல்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1.72 கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய சக்தியாக உள்ளது. கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்திலும், பின்னர் மறைந்த கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா காலத்திலும் அதிமுக ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது - பொன் ராதாகிருஷ்ணன்