பெங்களூரு : வெளிநாட்டு நிதிகளை நிர்வகிப்பதில் முறைகேடு செய்ததாக பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது இணையதள கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ்.
வெளி நாடுகளில் இருந்து நிதி பெற்றதில் முறைகேடில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். பெங்களூருவில் உள்ள பைஜூஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த 2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் பைஜூஸ் நிறுவனம் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதே 2011 முதல் 2023 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் பைஜூஸ் நிறுவனம் வெளிநாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் முக்கிய செலவாக்குகளில் உள்ளவர்களுக்கு 9 ஆயிரத்து 754 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் பல்வேறு முறைகேடு தொடர்பாக தனியார் மக்களிடம் இருந்து கிடைக்கப்பட்ட புகார்களை அடுத்து பைஜூஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்தியதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த புகார்கள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பைஜூஸ் தலைமை செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியதாகவும், அதற்கு அவர் தரப்பில் இருந்து பதில் கடிதமோ, விசாரணைக்கோ ஆஜராகவில்லை என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக தங்களது கல்வி பாடங்களை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை வாங்க பைஜூஸ் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில் தேசிய குழந்தை உரிமைகள் அமைப்பான என்சிபிசிஆர், பைஜூஸ் தலைமை செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரனுக்கு சம்மன் அனுப்பியது.
இது தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்கள் மற்றும் நுகர்வோர் வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தங்களது கல்வி படிப்புகளை வாங்க பெற்றோர் மற்றும் குழந்தைகளை கட்டாயத்திற்கு உள்ளாக்கி கடன் வாங்கும் நிலைக்கு பைஜூஸ் நிறுவனம் கொண்டு செல்வதாகவும் புகார் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாடு முதலீடு மற்றும் நிதிகளை நிர்வகிப்பதில் முறைகேடு செய்ததாக அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் பைஜூஸ் நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அதேநேரம் 2020 -21 நிதியாண்டு முதல் தனது வருமான கணக்கை பைஜூஸ் நிறுவனம் தணிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அமெரிக்கா எச்-1பி விசா குலுக்கல் முறையில் முறைகேடு - இந்தியர்களுக்கு சிக்கலா?