பெகுசராய் (பீகார்): பீகாரில் உள்ள பெகுசராய் பகுதியில் 8 பெண்கள் உயிரிழந்ததற்கும், 40 பேர் காயம் அடைந்ததற்கும் காரணமான 16 தெரு நாய்களை, 3 தேசிய துப்பாக்கி சுடும் குழுவினர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எட்டு பெண்கள், நாய்களால் கொல்லப்பட்டதை அடுத்து, துணை பிரிவு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் 'man-eater' தெரு நாய்களை கொல்லும் பணி திங்கள் கிழமை பச்வாரா பகுதியில் தொடங்கப்பட்டது.
நாய்கள் கூட்டம் கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதால் வயலுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கிராமத்தினர் தவித்து வந்தனர். இதன் விளைவாக, அவர்கள் உள்ளூர் பஞ்சாயத்தை அணுகினர், இறுதியில் அவர்கள் நாய் தொல்லையில் இருந்து காக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக எஹ்ரா எஸ்டிஓ ராகேஷ் குமார், வனத்துறையின் உதவியுடன் நாய்களைக் கொல்ல மூன்று தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்களை நியமித்தார்.
துப்பாக்கிச் சூட்டின் இரண்டாவது நாளான செவ்வாய்கிழமை, தேசிய துப்பாக்கி சுடும் வீரர்களான சக்தி சிங், ரெஹான் கான் மற்றும் ராஜாராம் ராய் ஆகியோரால் 16 நாய்கள் கொல்லப்பட்டன. அவர்களுக்கு நூற்றுக்கணக்கான கிராம மக்கள் உதவினர். பச்வாரா கடராபாத், அர்பா, பிகம்சாக் மற்றும் ராணி பஞ்சாயத்து பகுதிகளில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு முந்தைய துப்பாக்கிச் சூட்டில் 12 தெரு நாய்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
”மனிதர்களுக்கு ஆபத்தான இந்த தெரு நாய்களால் பல பெண்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தெரு நாய் கடி பீதியில் அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். வயல்களே தங்கள் வாழ்வாதாரமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால் அந்த நாய்களைக் கொல்ல வேண்டியது அவசியம்” என்று உள்ளூர் விவசாயி ரந்தீர் குமார் ஈஸ்வர் கூறினார்.
இதையும் படிங்க: பாட்னாவில் சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 5 பேர் மீது வழக்கு