சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் இன்று (டிசம்பர் 8) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பிற்பகல் 2.40 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 17 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றும், 28 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்துவருகிறது. இந்த முடிவுகளின்படி இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக பாஜக முதலமைச்சர் வேட்பாளரும், மாநில முதலமைச்சருமான ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். இதுகுறித்து தாக்கூர் கூறுகையில், இமாச்சல் மக்களின் முடிவை மதிக்கிறேன். 5 ஆண்டுகள் ஆட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும், பாஜக தலைமைக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்க உள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து துணை நிற்பேன்.
குறைகளை ஆராய்ந்து அடுத்த ஆட்சியில் மேம்படுத்துவேன் எனத் தெரிவித்தார். இந்த தேர்தலில் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமை விட 32,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்க்கட்சிகள் ஆக்சிடென்டல் சீப் மினிஸ்டர் என்று கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் இடைத்தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை