சிம்லா: கடந்த நவம்பர் 12ஆம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான 76.44 சதவிகித வாக்குகளை எண்ணும் பணி, இன்று (டிச.8) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பாஜக 10 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 16 இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் ஒருவர் முன்னிலை வகித்து வரும் நிலையில், 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆம் ஆத்மி சார்பில் 67 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட முன்னிலை பெறவில்லை. இந்த நிலையில் செராஜ் தொகுதியில் போட்டியிட்ட இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாகூர் (57), காங்கிரஸ் கட்சியின் சேத் ராமை விட 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் இதுவரை செராஜ் தொகுதியிலிருந்து 1998, 2003, 2007, 2012 மற்றும் 2017 ஆகிய ஐந்து ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்றது. மேலும் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் தோல்வியைத் தழுவியதால், ஜெய் ராம் தாகூர் ‘தற்செயலான முதலமைச்சர்’ என எதிர்க்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தலைமைச் செயலாளர்கள் நியமனம் மற்றும் சமீபத்திய இமாச்சலப்பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், ஜெய் ராம் தாகூரின் ஆட்சியில் பாஜக பல இடைத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் ஜெய் ராம் தாகூர் பெற்ற வெற்றி, காங்கிரஸ் கட்சியின் முன்னிலையால் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Gujarat Assembly Polls: குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கொண்டாட்டம்