டெல்லி: கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி மக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு அண்டை நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். சொந்த நாட்டில் புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் மற்றும் அடிக்கடி வீடு மாறுதல், சொந்த வீடு இல்லாத காரணங்களுக்காகவும் சிலர் தங்கள் வாக்குரிமையை இழக்கும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக கடந்த 2019 பொதுத்தேர்தலில் 67. 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாகவும், ஏறத்தாழ 30 கோடி மக்கள் புலம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாக்களிக்க முடியாத சூழல் நிலவியதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைத் தடுக்கும் வகையில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் எனப்படும் ஆர்.வி.எம். முன்மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு தேர்தல் பூத்தில் இருந்து 72 தொகுதிகளின் வாக்குகளை கையாள முடியும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல் மற்றும் சவால்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அது தொடர்பாக ஜனவரி 16ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் உள்பட 57 கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பனிமூட்டத்தால் குளத்தில் கவிழ்ந்த பேருந்து - 50 பேர் காயம்!