பெதுல்: மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி கிராமத்தில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாண்ட்வி கிராமத்தைச் சேர்ந்த சுனில் தாபர் என்பவரின் மகன் தன்மய் தியாவர்(8). இவர் வயலில் விளையாடிக் கொண்டிருந்த போது, எட்டு நாட்களுக்கு முன்பு சிறுவனின் தந்தை தோண்டிய 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அப்பகுதியில் தோண்டப்பட்டு, சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிணற்றின் உள்ளே கேமரா அனுப்பப்பட்டு, மீட்புப்படையினர் சிறுவனை கண்காணித்து வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “முதலில் 50 அடியில் சிக்கியிருந்த சிறுவனை கயிறு மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிறுவன் 12 அடி மேலே வந்ததும் கயிறு அறுபட்டுவிட்டது. இதனால் ஆழ்துளைக் கிணற்றின் அருகே குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு பாறைகள் நிறைந்துள்ளதால் தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நேற்று தனது தந்தையிடம் சிறுவன் பேசிய நிலையில், தற்போது சிறுவனை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனாலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் 7 மணி நேரத்திற்குள் சிறுவன் மீட்கப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 3-வது மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி.. பதைபதைக்கும் வீடியோ!