கொச்சி (கேரளா): கடந்த 2016 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், மீன்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வது டெண்டர் விடுவதில் முறைகேடு நிகழ்த்தியதாக லட்சத்தீவு எம்பி முகம்மது பைசல் உள்பட சில லட்சத்தீவு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. அது மட்டுமல்லாமல், லட்சத்தீவைச் சேர்ந்த மீனவர்களிடம் இருந்து 287 டன் துனா மீன்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதில், முதல் குற்றவாளியாக எம்பி முகம்மது பைசல் இணைக்கப்பட்டார். இதனையடுத்து பொருளாதார முறைகேடு வழக்காக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, எம்பி முகம்மது பைசலின் வீடு மற்றும் அதிகாரப்பூர்வ இல்லங்கள், லட்சத்தீவில் உள்ள எம்பியின் ஆண்ட்ரோத் தீவு, கொச்சி மற்றும் டெல்லியில் உள்ள எம்பியின் அதிகாரப்பூர்வ இல்லங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், எம்பியின் நெருங்கிய உறவினர்களால் நடத்தப்படும் கோழிக்கோடு மாவட்டத்தின் பெய்பூரில் உள்ள கோரல் லாஜிஸ்டிக்ஸ் பண்ணையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த அனைத்து இடங்களிலும் அமலாக்கத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டது பரபரப்புக்கு உள்ளானது.
இந்த சோதனையின் அடிப்படையில், தேவையான ஆவணங்கள் மற்றும் கடந்த 10 வருடங்களுக்கான வருமான வரி அறிக்கைகளை சமர்பித்து, நேரில் ஆஜராக வேண்டும் என எம்பிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முகம்மது பைசல் எம்பியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், தேவைப்பட்டால் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் எம்பிக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ப்ரீசர் அறைக்குள் சிக்கிக்கொண்ட நபர்: -18 டிகிரி செல்சியஸ் குளிரில் போராடிய நொடிகள்.!