அமலாக்கத் துறை இணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கெனவே பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வர் சிங், வரப்போகும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜேஷ்வர் சிங்கின் பின்னணி
இவரது மனைவி லக்ஷ்மி சிங்கும் ஒரு ஐபிஎஸ் அலுவலர். லக்னோவில் ஐஜியாக லக்ஷ்மி சிங் பணியாற்றுகிறார். உத்தரப் பிரதேசத்தின் முன்னணி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ராஜேஷ்வர் சிங், 2009ஆம் ஆண்டு மத்திய பணி மூலம் அமலாக்கத் துறைக்குச் சென்றார். இவர், 2010 காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் ஆகியவற்றை வெளிக்கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றினார்.
அதேவேளை, ராஜேஷ்வர் பாஜகவில் இணையப்போகிறார் என்ற செய்தியை அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஹரிஷ் சந்திர ஸ்ரீவத்ஸவா மறுத்துள்ளார். கட்சியில் இணைய ராஜேஷ்வர் விருப்பம் தெரிவித்தாலும், கட்சித் தலைமையின் ஆலோசனைக்குப் பின்னரே இது தொடர்பான முடிவு தெரிவிக்கப்படும் என ஹரிஷ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை நரசிம்ம ராவ் - தலைமை நீதிபதி புகழாரம்