டெல்லி: 224 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில அரசின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் நிறைவடைவதால் அங்கு புதிய அரசு அமைக்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது, " கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2.62 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பேர் பெண் வாக்காளர்கள். இவர்கள் வாக்களிப்பதற்கு 58,252 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது என்றார்.
மேலும், இந்த தேர்தலில் 9,17,241 பேர் முதன் முறையாக வாக்களிக்கின்றனர் எனவும், 1,25,406 பேர் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர் எனவும் கூறிய அவர், ஏப்ரல் 1 ஆம் தேதி உடன் 18 வயது நிறைவடையும் இளம் வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க வழிவகை செய்யப்படும் என்றார். இதன் மூலம் அவர்கள் வாக்களிப்பதற்கு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக சட்டப்பேரவையை பொறுத்தவரையில் 36 தனித் தொகுதிகள், 15 தொகுதிகள் பழங்குடியினர் தொகுதிகள், 173 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ல் தேர்தல் நடத்தப்பட்டு, மே 13 இல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20 இல் முடிவடைகிறது என்றும், பரிசீலனை ஏப்ரல் 21லும், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு ஏப்ரல் 24 கடைசி தேதி எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
தேர்தலில் போது பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் அண்மையில் குஜராத், மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பணம், பரிசுப்பொருட்கள், மதுபானம் உள்ளிட்டவை அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகங்களுக்கும் நன்றியும் கூறினார்.
இதையும் படிங்க: Karnataka Election: கர்நாடக மாநில தேர்தல் தேதி அறிவிப்பு!