டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திருணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் கடும் இடையே போட்டி நிலவுகிறது.
இதுவரை மூன்று கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக மேற்குவங்க மாநிலம் கூச்பெஹார் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட மம்தா பானர்ஜி, "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாக்களிக்க வரும் பெண்களிடம் தவறாக நடந்து வருகின்றனர். கூட்ட நெரிசலில் வாக்களிக்க வரும் பெண்களுக்கு அமித்ஷாவின் அறிவுரையின்படி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை அளிக்கின்றனர். பாஜக, வாக்காளர்கள் மீது அத்துமீறி தாக்குதல்களையும் நடத்துகிறது" எனக் குற்றம்சாட்டினார்.
இவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நாளைக்குள் (ஏப்.10) பாதுகாப்பு வீரர்கள் மீது தான் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மம்தா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக மார்ச் 27ஆம் தேதியும் தேர்தல் பரப்புரையின் போது காவல் துறையினர் குறித்து கூறிய கருத்து குறித்தும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என மம்தாவிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.