டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அரசுக்கு சொந்தமான சுரங்க குத்தகை ஒப்பந்தம் ஒன்றை தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, அரசு தொடர்பான ஒப்பந்தத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (எம்பி., எம்எல்ஏக்கள்) எடுத்தாலோ அல்லது அரசு சார்ந்த வர்த்தக்கத்தில் ஈடுபட்டாலோ அவர்களை தகுதி நீக்கம் செய்ய, 1951, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 9A மற்றும் அதுதொடர்பான பிரிவுகள் வாய்ப்பளிக்கிறது.
எனவே, மக்கள் பிரதிநிதியான ஹேமந்த் சோரன் மீதான இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், இந்திய அரசியலமைப்பு சட்டம் 192ஆவது பிரிவின்கீழ் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், சுரங்க குத்தகை தொடர்பான ஆவணங்களை அளிக்கும்படி அம்மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் முடிவின் அடிப்படையில் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்நிலையில், தன்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கோரி முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதில்,"சோரன் மீதான கடுமையான குற்றச்சாட்டு மீது அவரின் நிலைப்பாடு குறித்து கேட்க ஆணையம் விரும்புகிறது. அவருக்கு வரும் மே 10ஆம் தேதி வரை இந்த சம்மன் மீது பதிலளிக்க அவகாசம் வழங்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Raj Thackeray cancels 'Maha Aarti': ராஜ் தாக்கரே கைதாக வாய்ப்பு!