லக்கிம்பூர்: அசாம் மாநிலத்தின் லக்கிம்பூரில் உள்ள நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றவாளிகளை ஆஜர்படுத்த ஆக. 16ஆம் தேதி சென்றனர். அப்போது, கெர்ஜே (எ) ராஜு பருவா உள்பட மூன்று பேர் காவலர்களிடம் இருந்து தப்பிச்சென்றனர். இதில், ராஜு மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கடந்தாண்டு செப்டம்பரில் முதல்முறையாக போலீசாரிடம் சிக்கினார்.
இந்நிலையில், தப்பிச்சென்று இரண்டு நாள்களுக்கு பின் லக்கிம்பூரில் பாலத்திற்கு கீழே மறைந்திருந்த ராஜுவை கண்ட பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர். இதில், ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
ராஜு பருவா தன் கூட்டாளிகளான சோண்டி தாஸ் மற்றும் ஜதின் தாமுலி ஆகியோருடன் ஆக. 16ஆம் தேதி தப்பிச்சென்றார். நீதிமன்றத்தில் பாதுகாப்பு குறைவாக இருந்ததால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிதிமன்ற சிறை கழிப்பறையின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பிச்சென்றனர்.
மேலும், தப்பிச்சென்ற ஜதின் தாமுலி நேற்று முன்தினம் (ஆக. 18) போலீசிடம் சரணைடந்தார். மேலும், இந்தாண்டு ஜனவரியில், உடல்நலக் குறைவு காரணமாக லக்கிம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், ராஜூ இதேபோன்று தப்பிச்சென்று, பின்னர் போலீசாரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்... 5 பேர் கைது