புதுச்சேரி: புதுச்சேரி வம்பாக்கீர பாளையத்தில் உள்ள கலங்கரை வளாகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக அமைச்சகம் சார்பில் யோகா விழா இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று யோகா நிகழ்வைத் துவக்கி வைத்தார். அப்பொழுது பேசிய அவர், "தேவாரம், திருவாசகம் போன்றவற்றைத் தொடர்ந்து படிப்பதினால் மனமும் உடலும் உறுதி ஆகிறது. இதனால் இது போன்ற விஷயங்களைத் தொடர்ந்து பயில வேண்டும்", என வலியுறுத்தினார்.
ஐந்து வயதிலிருந்து குழந்தைகளுக்கு யோகாவைக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் எனப் பெற்றோர் உறுதி எடுக்க வேண்டும் என்று தமிழிசை பேசினார். தீபாவளி, பொங்கல் பண்டிகை போல ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா விழாவை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். ஜூன் 21ஆம் தேதி யோகா விழாவை உடல்நலம் மற்றும் மனநல விழாவாகக் கொண்டாட வேண்டும் எனத் தமிழிசை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் துணைநிலை ஆளுநரும் யோகா செய்து யோகா விழாவைத் துவக்கி வைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “இந்தியா சொல்வதை உலகம் இன்று கேட்டுக் கொண்டு உள்ளது. அரசாங்க விருந்தினராகப் பிரதமர் வெளிநாடு சென்று உள்ளார். அதுவும் யோகாக் கலையைத் துவக்கி வைக்கச் சென்றுள்ளார். அரபு நாடுகள் கூட யோகா விழாவை கொண்டாடுகிறார்கள் என்றார். குடும்பத் தலைவிகள் யோகா பயில வேண்டும். சமையல் கூடத்தில் இருந்து கொண்டும் யோகா செய்ய வேண்டும். குடும்பத் தலைவிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும்”, என கூறியுள்ளார்.
மேலும் அவர், “தாய்ப்பாலைப் போல ஐந்து வயதுக்கு பிறகு யோகாவை கற்றுத் தர வேண்டும். இதைத் தான் தமிழன் ஏற்கனவே,"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது". குழந்தை வளர்ப்பில் யோகாவை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், பள்ளிகளில் நிச்சயமாக யோகா கொண்டுவர வேண்டும்”, எனவும் கூறினார்.
சமீபத்தில் கல்வித்துறை கூட்டத்தில் இதை வலியுறுத்தியதாகத் தெரிவித்த அவர், யோகா விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் எனக் கல்வித் துறை அதிகாரியிடம் வலியுறுத்தியதாகத் தமிழிசை தெரிவித்தார்.