ஆப்கானிஸ்தானில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவனிடம் பேசியுள்ளார்.
தலைநகர் காபூலும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் வெளிநாட்டுத் தூதர்கள், தூதரக அலுவலர்களை சொந்த நாட்டிற்கு மீட்டு வர அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தியர்கள் மீட்கும் பணி தீவிரம்
ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூலை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், முதல்கட்டமாக சுமார் 120க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ’ஏர் இந்தியா’ விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டனர். அன்றே அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் மீட்புப் பணியில் தீவிரமாக செயல்படத் தொடங்கின.
சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் காபூலை மையமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் மீதமுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முனைப்புக் காட்டிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவனிடம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தப் பேச்சு வார்த்தையின்போது, காபூலில் உள்ள இந்திய அலுவலர்களை மீட்க அஜித் தோவல் ஜாக் சல்லிவனிடம் அமெரிக்கப் படையினரின் உதவியை கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காபூல் நகரிலிருந்து 120 இந்தியர்களை மீட்டுவந்த சி-17 விமானம் குஜராத் மாநிலம், ஜாம்நகரை வந்தடைந்தது.
இதையும் படிங்க: இ-எமர்ஜென்சி விசா: இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை