கர்நாடகா மாநிலம் மைசூருவில், கிரண் (28), கிஷாண் (29) ஆகிய இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெருங்கிய நண்பர்களான கிரண், கிஷாண், மது ஆகிய மூவரும் ஏளி தோட்டா எனும் இடத்திற்கு வார விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளனர். அங்கு ஒரு கும்பல் மூவரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த கிரணும், கிஷாணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காயமடைந்த மது தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தக் கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது தொடர்பாக சிகிச்சையிலிருக்கும் மதுவிடம் நடத்திய விசாரணையில், மீசே சுவாமி என்ற நபர் தான் இத்தாக்குதலுக்கு காரணம் எனத் தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மீசே சுவாமிக்கும், கிரணுக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மீசே சுவாமி, கிரணைத் தாக்க தக்க நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் கிரணும் அவரது நண்பர்களும் ஏளி தோட்டாவிற்கு சென்றதை அறிந்த மீசே, தனது மைத்துனர் உதவியோடு அவர்களைத் தாக்க திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடியே நேற்று (பிப்.7) இரவு 11.30 மணியளவில் மீசே சுவாமியின் மைத்துனர், கூர்மையான ஆயுதங்களால் மூவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் கிரண், கிஷாண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:கடற்படை அலுவலர் எரித்துக் கொலை - மும்பை காவல் துறை சென்னையில் முகாம்!