திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பூபன் ஹசாரிகா பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார். நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். நாட்டுப்புற பாடல்கள் மூலம் தனி கவனம் பெற்றவர். பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை மற்றும் பாடல்களை கேட்டே அவரது பள்ளிப்பருவம் தொடங்கியது. பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல்களை பாடினார். 10 வயதில் தனது முதல் பாடலை பாடினார். அதைத்தொடர்ந்து இசையமைக்க தொடங்கினார். இந்த இசையால் ஈர்க்கப்பட்ட அஸ்ஸாமி பாடலாசிரியர் ஜோதிபிரசாத் அகர்வாலா, திரைப்படத் தயாரிப்பாளர் பிஷ்ணு பிரசாத் இருவரும் இவரை திரைத் துறைக்கு அறிமுகப்படுத்தினர். அஸ்ஸாம் மக்களின் மனதில் ஹசாரிகாவின் பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
முனைவர் பட்டம்: ஹசாரிகா 1946ஆம் ஆண்டு அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின் 1952ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். தேசிய மற்றும் உலக அளவில் அஸ்ஸாமிய கலாச்சாரத்தை பிரபலப்படுத்தும் விதமாக பாடல்களை அமைத்தார். இந்திய அரசின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் உட்பட பல வாரியங்கள் மற்றும் சங்கங்களின் தலைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றினார்.
பாரத ரத்னா ஹசாரிகா: இவரது சிறந்த பங்களிப்பிற்காக, சங்கீத நாடக அகாடமி விருது, தாதாசாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து 2011ஆம் ஆண்டு உயிரிழந்தார். 2019ஆம் ஆண்டில், இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல தபால் தலையும் வெளியிடப்பட்டது. இவரது 96ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க:இந்திய இயற்பியலாளர் அன்னா மாணிக்கு டூடல் வெளியிட்ட கூகுள்