டெல்லி: டெல்லியில் நடந்த இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காதலியை 35 துண்டுகளாக வெட்டி, ஃபீரிசரில் வைத்து வெவ்வேறு இடங்களில் வீசிய காதலன் அஃப்தாப் அமீனை போலீசார் கைது செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த கொலை சம்பவம் அம்பலமானது.
இந்த நிலையில், கைதான அஃப்தாப் அமீன் கடந்த மே மாதம், வலது கையில் ஏற்பட்ட வெட்டு காயத்துக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றது தெரிய வந்துள்ளது. வெட்டு காயத்துடன் சத்தர்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அஃப்தாப் சிகிச்சை பெற்றதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அஃப்தாபுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அனில் குமார் கூறும்போது, "கடந்த மே மாதம் அஃப்தாப் கையில் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்தார். காயம் ஆழமாக இல்லை. காயம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டபோது, பழத்தை வெட்டும்போது கத்தியால் கையை வெட்டிக் கொண்டதாக கூறினார். மேலும் அவர் என்னிடம் காட்டியது ஒரு சிறிய சுத்தமான கத்தி என்பதால், நான் அவரை சந்தேகிக்கவில்லை.
அவர் சிகிச்சைக்கு வந்தபோது, அவரது இயல்பு ஆக்ரோஷமாக இருப்பதைக் கண்டேன். அவருக்குள் இருந்த அமைதியின்மை முகத்தில் பிரதிபலித்தது. அவர் மிகவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருப்பதாகவும் என்னிடம் கூறினார். அவர் மும்பையைச் சேர்ந்தவர் என்றும், ஐடி துறையில் வேலை பார்ப்பதற்காக இங்கு வந்திருப்பதாகவும் கூறினார்.
ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் எந்த சோகமும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான், அஃப்தாப் பூனாவாலாவுடன் போலீசார் இங்கு வந்தனர். நான் சிகிச்சை அளித்தது உண்மையா? என்று கேட்டார்கள். நானும் உண்மையை கூறினேன்" என்றார்.
ஷ்ரத்தாவும் மே மாதத்தில்தான் கொலை செய்யப்பட்டார் என்பதால், அந்த வெட்டுக் காயம் ஷ்ரத்தா உடலை வெட்டும்போது ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: "ஷ்ரத்தா அஃப்தாபை பிரியவே நினைத்தாள்..." - ஷ்ரத்தாவின் பெஸ்டிகள் உருக்கம்!