கோவை: தமிழ்நாடு முழுவதிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டப்பேரவையின் அதிமுக வேட்பாளரான பொள்ளாச்சி ஜெயராமன் இன்று பொள்ளாச்சி நகர் பகுதிகளில் உள்ள வார்டுகள், மகாலிங்கபுரம், எல்.ஐ.சி காலனி, கண்ணகி நகர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.
பின்னர், பொள்ளாச்சியிலுள்ள தேவாலயம் ஒன்றில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான அரசு வெற்றிபெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சிறுபான்மையின மக்களின் நலனிற்காக அதிமுக அரசு எப்போதும் பாடுபடும். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளிலேயே சிறுபான்மையின மக்கள் தங்களின் புனித தலங்களுக்கு செல்ல பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் நடைபெறுகின்றன. அதற்கு அக்கட்சியின் கொள்கையே காரணம் என்றார்.
மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு ஒன்றிற்கு இலவசமாக ஆறு சிலிண்டர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கான 1500 ரூபாய் மாத ஊதியம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார் .
இவருடன், பொள்ளாச்சி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார், கோவை புறநகர் மாவட்ட சிறுபான்மை இணைச் செயலாளர் ஜேம்ஸ் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.