புதுச்சேரி: சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதனைச் சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். இதையடுத்து மறைந்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவர்களைப் போல் சீருடை அணிந்தும், புத்தகப் பை மாட்டிக்கொண்டும், ஐ.டி. கார்ட் மாட்டிக்கொண்டும் சைக்களில் ஊர்வலமாக வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை மற்றும் சைக்கிள் வழங்காததைக் கண்டித்து இவ்வாறு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாகவும், பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் அறிவிக்காததால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எதிர்க்கட்சி தலைவர் சிவா, “ஆளும் அரசு ஒன்றரை வருடங்கள் ஆகியும் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை, சைக்கிள், நோட்டு புத்தகங்கள் வழங்கவில்லை. மேலும் தரமான மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இதை நினைவு கூறும் வகையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் சீருடைகளை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். சட்டமன்ற மேம்பாட்டு நிதியைக் கூட வழங்காத அரசாக இந்த அரசு உள்ளது.
ஜி20 மாநாடு மாதந்தோறும் புதுச்சேரியில் நடத்த வேண்டும். ஏனென்றால் இதற்காக ஒருவாரத்தில் 10 சாலைகள் போடப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பலமுறை கோரிக்கை வைத்துப் போடப்படாத சாலைகள் இந்த மாநாட்டால் போடப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: தமிழக பாஜகவின் புதிய திட்டம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் தனித்தனியாக ஆலோசனை!