புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் சாகன் எனும் பகுதியில் தாபாவில் உணவில் உப்பு இல்லாததால் சமையல்காரர் ஒருவரை, அடித்துக்கொன்ற உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனேவில் உள்ள சாகன் எனும் பகுதியில் செயல்பட்டு வரும் ஓம்கார் எனும் தாபாவில் சமையல்காரராக பணியாற்றி வந்த பிரசென்ஜித் கோராய் என்பவர் கடந்த மாதம் ஆற்றங்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில் சம்பவம் நடந்த அன்று யாரோ இரண்டு பேர் உடலை ஆற்றில் வீசிவிட்டுச் சென்றதாக அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல்துறைக்கு தாபா உரிமையாளர்களான கைலாஷ் கேந்திரா மற்றும் ஓம்கார் கேந்திரா ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவல்துறையினர் இரண்டு பேர் மப்டியில் அந்த தாபாவிற்கு சென்று, உரிமையாளர்களுடன் நன்றாகப் பேசி இருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் அந்த புகைப்படத்தைத் தகவல் தெரிவித்த நபரிடம் காண்பித்து பிரசென்ஜித் கோராயை ஆற்றில் வீசியவர்கள் இவர்கள் தானா என்பதை உறுதி செய்து, உரிமையாளர்களைக் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாங்கள் உணவு கேட்ட போது அதில் உப்பு இல்லாததால், சமையல்காரர் தலையில் சட்னியை ஊற்றி, அவரை அடித்துக் கொடூரமாகக் கொன்று ஆற்றில் வீசியது தெரியவந்தது. பின்னர் தாபா உரிமையாளர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவியை அபகரித்த நண்பன்.. கத்தியால் வெட்டிய கணவர்..