இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்குப்பின் அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் பல நாடுகளுக்கு தேவைக்கேற்ப விமான சேவையை ஓராண்டாக மேற்கொண்டுவருகிறது.
மேலும் 25 நாடுகளுடன் ஏர் பபுல் ஒப்பந்தம் மூலம் மிகக் குறைந்த அளவில் விமான சேவையை அரசு செய்து வருகிறது. தற்போது இரண்டாம் அலை ஓய்ந்து தடுப்பூசி திட்டமும் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து தளர்வுகளை அரசு அளித்து வருகிறது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு அரசு கூடுதல் தளர்வு அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அரசு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போதைய தடையானது அக்டோபர் 31ஆம் தேதி வரை தொடரும் என விமான போக்குவரத்து இயக்குனராகம் உத்தரவிட்டுள்ளது. கோவிட்-19 நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, கார்கோ சேவைகளுக்கு எந்தவித தடையுமில்லை என விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கட்சிக்கு உண்மையாக இல்லாதவர் 'கனையா குமார்' - டி ராஜா தாக்கு