அனகப்பள்ளி : ஆந்திராவில் நேர்த்திக் கடன் தீர்க்க மகளின் எடைக்கு நிகராக தம்பதி தக்காளியை காணிக்கையாக செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது.
ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்பா ராவ், மோகினி தம்பதி. இவர்களுக்கு பாவிஷ்யா என்ற மகள் உள்ளார். தம்பதி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு அம்மனிடம் நேர்ச்சை வைத்ததாக கூறப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறினால் தங்க மூக்குத்தியை அம்மனுக்கு காணிக்கையாக அளிப்பதாக தம்பதி வேண்டுதல் வைத்ததாக கூறப்படுகிறது.
அந்த வேண்டுதல் நிறைவேறிய நிலையில் தங்க மூக்குத்தியை காணிக்கையாக செலுத்த தம்பதி நுகலம்மா கோயிலுக்கு சென்று உள்ளனர். அப்போது நுகலம்மா கோயில் நிர்வாகத்தினர் அன்னதானம் வழங்க தக்காளி தேவைப்படுவதாகவும் பக்தர்கள் யாரும் தக்காளி தானமாக வழங்கவில்லை என்பதால் மூக்குத்திக்கு பதிலாக தக்காளியை காணிக்கையாக தருமாறு தெரிவித்து உள்ளனர்.
அதன்படி தம்பதி, தங்களது மகளின் எடைக்கு எடை தக்காளியை துலாபாரமாக வழங்க முடிவு செய்தனர். கோயில் எடை தராசு என்பபடும் துலாபாரத்தில் தங்கள் மகள் பவிஷ்யாவை அமர வைத்து எடைக்கு எடை தக்காளியை தானமாக வழங்கினர். பவிஷ்யா 51 கிலோ எடை இருந்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியின் எடைக்கு நிகராக 51 கிலோ தக்காளியை தம்பதி காணிக்கையாக வழங்கி உள்ளனர்.
தம்பதி வழங்கிய 51 கிலோ தக்காளி நித்திய அன்னதானம் என்படும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சராசரியாக கிலோ தக்காளி 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தம்பதியின் இந்த நூதன காணிக்கை கவனத்தை ஈர்த்து உள்ளது.
தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில், தங்களது மகளின் எடைக்கு நிகர தம்பதி தக்காளியை காணிக்கையாக வழங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி திருட்டை தவிர்க்க பவுன்சர்களை பணியமர்த்தி வியாபாரி தக்காளி விற்பனை செய்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மும்பையில் 3வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் - விரைவில் தேதி அறிவிப்பு!