டெல்லி : கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்படுத்திய விவகாரத்தில் மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்ட், நீலம் தேவி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இருக்கை பகுதியில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட மனோரஞ்சனின் நண்பரையும், இந்த வழக்கில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்ட், நீலம் தேவி ஆகியோரின் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நான்கு பேரை போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கில் தொடர்புடைய நான்கு பேரிடமும் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி 15 நாட்கள் காவலை நீடிக்குமாறு டெல்லி போலீசார் தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், நான்கு பேரின் காவலை ஜனவரி 5ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மீதமுள்ள இருவருக்கும் விரைவில் காவல் நிறைவடைய உள்ள நிலையில், அவர்களும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் வழக்கில் தொடர்புடையதாக கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியை சேர்ந்த சாய் கிருஷ்ணா என்பவரை 7வது நபராக வழக்கில் சேர்த்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் காவல் துறை டி.எஸ்.பியின் மகனான சாய் கிருஷ்ணா, பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மனோரஞ்சனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் பெங்களூரு இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னால்ஜியில் ஒன்றாக படித்ததாகவும் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் இருவரும் பணியாற்றியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், விரைவில் பல்வேறு உண்மைகள் வெளிக் கொணரப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - கர்நாடகா டெக்கி கைது! திடீர் ட்விஸ்ட் கொடுத்த போலீசார்! என்ன நடந்தது?