டெல்லி: தலைநகர் டெல்லியில், நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டம் விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பிகாரில் இன்று (ஜூன் 23ஆம் தேதி) எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம், பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, சரத்பவார், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்து உள்ள டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்காவிட்டால், பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தை, ஆம் ஆத்மி கட்சி புறக்கணிக்கும் என்று, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவின், இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள புறப்படும் முன், பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறியதாவது, "நாங்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட விரும்புகிறோம், பாஜக அரசை அகற்றுவதே எங்களது நோக்கம்". டெல்லி அவசர சட்டம் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் முடிவெடுப்போம்" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லியில் குரூப்-ஏ அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், அவர்களை பணியமர்த்துவதற்கும் ஏதுவாக ஒரு அதிகாரத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை மே 19ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. அதிகாரிகளை டெல்லி அரசு கட்டுப்படுத்தும் விவகாரத்தில், ஆம் ஆத்மி அரசுக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள அவசர சட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (NCCSA) உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்து இருந்தார். டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், மத்திய அரசு, இந்த அவசர சட்டத்தை பிறப்பித்து உள்ளது.
இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (DANICS) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
பாட்னா எதிர்கட்சி கூட்டத்திற்கு முன்னதாக, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அவசரச் சட்டம் தொடர்பாக, அனைத்து எதிர்க்ட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார். டெல்லி அவசரச் சட்டம் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி, தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மே மாதம் 23ஆம் தேதி முதல், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.