டெல்லி: பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியரின் மகள் ஆராத்யா (11). பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பேத்தி. இந்நிலையில் ஆராத்யா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 19ம் தேதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், " நான் உடல் நலம் குன்றியிருப்பது போல சில யூ-டியூப் சேனல்களில் வீடியோக்கள் மற்றும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இதுபோன்ற போலியான செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 20) நீதிபதி ஹரி சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, "9 யூ-டியூப் சேனல்களுக்கு தடை விதிக்கிறேன். ஆராத்யாவின் உடல் நலம் தொடர்பான எந்த தகவலையும் பொது தளத்தில் வெளியிடக் கூடாது. ஒரு பிரபலத்தின் குழந்தையாக இருந்தாலும், சாமானியர்களின் குழந்தையாக இருப்பினும் ஒவ்வொரு குழந்தைகளும் மரியாதைக்கு உரியவர்கள் ஆவர்.
ஆராத்யா குறித்த போலியான செய்தி மற்றும் வீடியோக்களை யூ-டியூப் நிறுவனம் உடனடியாக நீக்க வேண்டும். அத்துமீறலில் ஈடுபட்டவர்களின் செல்போன் எண், இ-மெயில் முகவரியை கூகுள் மற்றும் யூ-டியூப் நிறுவனங்கள் அளிக்க வேண்டும். ஒரு குழந்தை பற்றிய மனம் மற்றும் உடல்நலம் சார்ந்த தவறான தகவல்களை சட்டம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆராத்யா தொடர்பான போலியான தகவல் பதிவேற்றப்படுவதைத் தடுக்க, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஒருவாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறினார்.