இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்துவந்தாலும், டெல்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தேசிய தலைநகர் பகுதியில் தற்போது கரோனா மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அது முடிவுக்கு வரும் என்றும் அம்மாநில அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "தனியார் மற்றும் அரசு குழுக்கள் சேகரிக்கும் மாதிரிகளுக்கு RT-PCR கரோனா பரிசோதனை கட்டணமாக ரூ .800 மட்டுமே வசூலிக்க வேண்டும். அதேநேரம் வீடுகளுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் கரோனா RT-PCR கரோனா பரிசோதனை கட்டணமாக ரூ.1,200ஐ வசூலிக்கலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆய்வகங்களும் அடுத்த 24 மணி நேரத்தில் திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தனியார் ஆய்வகங்கள் மாதிரிகளை சேகரித்த 24 மணி நேரத்திற்குள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் முடிவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில், "டெல்லியில் RT-PCR சோதனைகளின் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். அதேசமயம் அரசு ஆய்வகங்களில் இந்தச் சோதனை இலவசமாக நடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தக் கட்டண குறைப்பு தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்வோருக்கு உதவும்" என்று தெரிவித்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் கட்டண குறைப்பு குறித்த டெல்லி அரசின் அரசாணை வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: அவரச அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள மாடர்னா