ஹைதராபாத்: டெல்லி அரசு கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதில் பணமோசடி நடந்திருப்பாக புகார் எழுந்ததையடுத்து, டெல்லி ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
பணமோசடி விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம், புதிய மதுபானக்கொள்கையை டெல்லி அரசு திரும்ப பெற்றது. இந்த பணமோசடி தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி பழைய மதுபான கொள்கை மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் அமலாக்கத்துறையினர் நடத்திய தொடர் சோதனைகளில் மதுபான வியாபாரி சமீர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்த வழக்கில் பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் உள்ள சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று(அக்.7) அமலாக்கத் துறையினர் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத்தில் உள்ள 35 இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் அடையாளம் தெரியாத ஊடக நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், ஊடக நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு பணப் பறிமாற்றம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சோதனையில் குற்றவியல் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் டெல்லியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.