நாட்டில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தலைநகரில் டெல்லியில் கரோனா ருத்ரதாண்டவம் ஆடி வந்தது. இதனைக் கட்டுபடுத்த அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தப்படியே மூன்று வார முழு ஊரடங்கின் பலனாக, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 35 விழுக்காடிலிருந்து 23 விழுக்காடாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஐந்து நாள்களுக்கு பிறகு கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை 300க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 13 ஆயிரத்து 336 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதாரத் துறை கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,29,142 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவற்றில், 90,289 பேர் முதல் டோஸைப் பெற்றனர்; 38,853 பேர் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தலைநகரில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 38,75,636.
இதற்கிடையில், டெல்லியில் முழு ஊரடங்கு உத்தரவு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.