டெல்லி: கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார், 4 பேர் கைது செய்தது இரண்டு பேரை தேடி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிஆர்பிஎப், டி.ஜி அனிஷ் தயால் சிங் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மேலும், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்டவர்களை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனிடையே, கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை நடத்த, சிறப்பு குழு 15 நாட்கள் காவல் கோரிய நிலையில், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த லலித் ஜா நேற்று (டிச. 14) தானாகவே டெல்லி காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். கைது செய்யப்பட்ட லலித் ஜா, பாதுகாப்பு குளறுபடிக்கு மூளையாக செயல்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
லலித் ஜாவை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். முன்னதாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மக்களவையில் திமுக எம்.பி.கள் கனிமொழி உள்ளிட்ட 13 பேரையும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி என மொத்தம் 14 பேரை நடப்பு கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : "கண்ணியமாக சாக விருப்பம்; நீதிபதியால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்" - பெண் நீதிபதி பரபரப்பு கடிதம்.. தலைமை நீதிபதி உத்தரவு என்ன?