டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போதே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்தாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. சுகேஷ் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜாக்குலினுக்கு, மோசடி செய்து பறித்த பணத்தில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பண மோசடி தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஜாக்குலின் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ஜாக்குலின் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி ஷைலேந்திர மாலிக், நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஐம்பதாயிரம் ரூபாய் பிணைத் தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.