ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியிடம் தகாத முறையில் ஒருவர் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அம்மாநில போலீசாருக்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மலிவால் கோரிக்கை விடுத்து உள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில், வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி, ஒருவரால் தகாத முறையில் நடத்தப்படும் வீடியோ பகிரப்பட்டது. அந்த வீடியோவில் தன் சக நண்பருடன் சுற்றுலா வந்த பெண் பயணியை இடைமறித்து தகாத முறையில் தொடுவது போன்று ஒருவர் ஈடுபடுகிறார். இதனால் அசவுகரியத்தை உணர்ந்த அந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி, சம்பந்தப்பட்ட நபரை தள்ளிவிட்டு தானும் நகர்ந்து செல்ல முயற்சி செய்வது போன்று அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க : அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை... அம்பானிக்கே இந்த நிலைமையா?
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் இந்த வீடியோவில் உள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், வீடியோவில் வெளிநாட்டு சுற்றுலா பயணியை நபர் ஒருவர் தகாத முறையில் தொடுவது வெட்கக்கேடானது. இந்த சம்பவம் நாட்டுக்கே அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், இந்த பதிவை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் போலீசாருக்கு டேக் செய்த சுவாதி மலிவால் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை வேடிக்கை பார்த்த ஜப்பான் பெண் சுற்றுலா பயணிக்கு வலுக்கட்டாயமாக வர்ணம் பூசியதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் நியமனம்... சரத் பவாருக்கு அடுத்தடுத்து நெருக்கடி!