டெல்லி: மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் 3வது முறையாகப் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி இன்று (ஜன.3) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “அமலாக்கத்துறைக்கு ஒத்துழைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தயாராக இருப்பதாகவும், ஆனால் அமலாக்கத்துறையானது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிடாமல் தடுப்பதற்காக இந்த சம்மனை அனுப்பி உள்ளது.
மேலும், தேர்தலுக்கு முன்பு ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது? அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களைத் தேர்தல் பிரசாரத்திலிருந்து தடுத்து நிறுத்தி கைது செய்ய எடுக்கும் முயற்சியே இந்த சம்மன்” எனக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 2ஆம் தேதி மற்றும் டிசம்பர் 21ஆம் தேதிகளில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்திருந்தார்.
முதன்முறையாக கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால், இது “சட்ட விரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறி சம்மனை புறக்கணித்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக, கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்தும் நோக்கில், அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ”ஒரு சீனர்களை கூட சட்ட விரோதமாக அனுமதிக்கவில்லை”... பண மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் பதில்..!