ஔரங்காபாத்: பீகார் மாநிலம், ஔரங்காபாத் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வந்த் சிங் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் பல்வந்த் சிங் தோல்வியடைந்தார். தனது மிகப் பெரிய தோல்விக்கு தலித்துகளே காரணம் என அவர் எண்ணியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பல்வந்த் சிங், பட்டியலின இளைஞர்களை பிடித்து கம்பியால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
வாக்களிக்காததால் தண்டனை
மேலும் இரண்டு பட்டியலினத்தவரை பிடித்து தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை கொடுத்துள்ளார். முன்னதாக பல்வந்த் இருவரையும் காதுகளைப் பிடித்து உட்கார வைத்தபோது, யாரோ ஒருவர் முழு செயலையும் காணொலியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். காணொலி வைரலானதை அடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காணொலியில் பல்வந்த் இரண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், அவர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை என்றும் குறிப்பிடுவதைக் கேட்கலாம்.
தாக்குதலுக்கு காரணம் என்ன?
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நீதிபதி சௌரப் ஜோர்வால் மற்றும் எஸ்பி காந்தேஷ் குமார் மிஸ்ரா ஆகியோர் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், பல்வந்தை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின் போது, “நன்றாக குடித்ததன் காரணமாகவே கிராம மக்களை தண்டிக்கும் நோக்கில் நடந்து கொண்டேன்” என பல்வந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 15 மணி நேர சோதனை... பார் மேக்கப் அறை கண்ணாடிக்குப் பின் ரகசிய பாதாள அறை... 17 பெண்கள் மீட்பு