களமச்சேரி: கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் மதவழிபாட்டு தளத்தில் கடந்த 29ஆம் தேதி திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாத பொருளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தர்.
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சோதனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். இதற்கிடையில் திருச்சூர் மாவட்டதை சேர்ந்த மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்று தாமாக முன் வந்து சரண் அடைந்தார்.
அவரிடம் போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு இருந்த 61 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலியானவர் களமச்சேரியைச் சேர்ந்த மோலி ஜாய் (வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (நவ. 6) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்து உள்ளது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளதாகவும் அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் தேர்தல் பணியில் வெடிகுண்டு விபத்து! எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி!