டெல்லி: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள இவரது அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி 14 மாதம் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த நபர் போனில் பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர், நிதின் கட்கரியிடம் பேச வேண்டும் என கூறியதாக தெரிகிறது. கட்கரி தற்போது இங்கு இல்லை என அந்த நபரிடம் பணியாளர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும் என்றும், இல்லையென்றால் நிதின் கட்கரி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவேன் என்றும் மறுமுனையில் பேசிய நபர் மிரட்டியுள்ளார். மேலும், தாம் தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். பிறகு மார்ச் 21ம் தேதி பேசிய அதே நபர், ரூ.10 கோடி வேண்டும் என கேட்டுள்ளார். நிதின் கட்கரியின் டெல்லி அலுவலகத்துக்கும் இதே போன்ற மிரட்டல் தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொலைபேசி அழைப்பு வந்த எண்ணை ஆய்வு செய்த போது, அது கர்நாடகா மாநிலம் பெல்காம் சிறையில் இருந்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், கட்கரிக்கு மிரட்டல் விடுத்தவர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜயீஷ் கந்தா என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மார்ச் 28ம் தேதி பெல்காம் சிறைக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள், ஜயீஷை கைது செய்து, நாக்பூர் சிறைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் ஜயீஷூக்கு லஷ்கர்-இ-தொய்பா, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளிட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜயீஷ் மீது நாக்பூர் போலீசார் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், என்ஐஏ அதிகாரிகள் கட்கரியின் நாக்பூர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் கடந்த மாதம் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் அவசர அழைப்பு எண்ணை தொடர்பு கொண்ட அமீன் (19) என்பவர், யோகி ஆதித்யநாத்தை கொலை செய்து விடுவேன் என கூறி மிரட்டினார். பின்னர் கான்பூர் அருகே உள்ள பெகும் புர்வா பகுதியில் அவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.