உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தன் குடும்ப உறுப்பினர்கள் 7 பேரைக் கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஷப்னத்துக்கு மரண தண்டனை விதித்தது.
இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரின் மரண தண்டனையை உறுதி செய்தது. கடந்த 2019ஆம் ஆண்டு ஷப்னம் ராம்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஷப்னம் சில கைதிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஷப்னம் தூக்கு தண்டனை தேதி முடிவு செய்யவில்லை' - உ.பி., நீதிமன்றம்
அந்த புகைப்படம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி சிறை வளாகத்திற்குள் எடுக்கப்பட்டதாக சிறை நிர்வாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், ’இது சிறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல்’ என்றார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு காவலர்களை சிறை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஷப்னம் ராம்பூர் சிறையிலிருந்து பரேலி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே சிறைச்சாலையில் ஷப்னம் உடன் காணப்பட்ட மற்றொரு கைதியும் பரேலி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பரேலி சிறை கண்காணிப்பாளர் பி.சிங் தெரிவித்துள்ளார்.
இருவரையும் பரேலி சிறைக்கு மாற்றுவதற்கான உத்தரவை ராம்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஞ்சநேய குமார் திங்கள்கிழமை (மார்ச்.1) வழங்கிய நிலையில், நேற்று (மார்ச்.2) இருவரும் பரேலி சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க:அம்பத்தூரில் ஹெராயின் விற்பனை- இருவர் கைது!