பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநகர் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் சந்த் என்பவர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் பினா மஹாவரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், அவரது உறவினர்களான தரம் சிங், வீர் சிங், கோவர்தன், தீரஜ், ஷிவ்லஹரி ஷர்மா ஆகியோர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை விஷம் வைத்து கொன்றுவிட்டதாகவும், தனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது தனக்கு இறப்புச் சான்றிதழ் வாங்கி சொத்தை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இறப்புச் சான்றிதழ் வாங்கியதோடு, கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தன்னை அவர்களது தீவிர கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும், அண்மையில் அவர்களிடமிருந்து தப்பித்து தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது தான் உயிரோடு இருக்கிறேன் என்று நிரூபிப்பதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதாகவும், இதற்கு காரணமான உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்திலும் அரசு ஊழியர்களால் ஏமாற்றப்பட்டு, இறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட ஹரிகிஷன் என்பவர், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடி வருவதாக செய்தி வெளியானது. இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஆண்டு வெளியான "காகஸ்" பட பாணியிலேயே உள்ளன.