லூதியானா : பஞ்சாப்பில் உள்ள உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட மட்டன் உணவில் எலி இறந்து கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
பஞ்சாப், லூதியானா மாவட்டத்தில் உள்ள தாபாவில் மட்டன் உணவு ஆர்டர் செய்தவருக்கு, இறந்த எலியை சமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லூதியானா, ஜாக்ரான் மேம்பாலம் உள்ள பகுதியில் பிரகாஷ் தாபா உள்ளது. அந்த தாபாவிற்கு சென்ற ஒரு குடும்பத்தினர் சாப்பாடு மற்றும் மட்டன் உணவு ஆர்டர் செய்து உள்ளனர். சாப்பாடு மற்றும் மட்டன் உணவு அவர்களுக்கு பரிமாறப்பட்ட நிலையில், அதில் இறந்த எலி வறுக்கப்பட்ட எலி கிடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வறுக்கப்பட்ட எலியை மட்டன் உணவில் கலந்து கொடுத்ததாக கூறி வீடியோ வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில், வீடியோ டிரெண்டாகி பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வைரல் வீடியோ குறித்து பேசிய கடையின் உரிமையாளர், "கடந்த பல ஆண்டுகளாக தாபாவை நடத்தி வருவதாகவும், உணவக சமயலறையில் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த வீடியோ தங்களது தாபாவின் பெயரின் கெடுக்க அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் தங்கள் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருடன் மோதல் ஏற்பட்ட நிலையில் அவர் மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் அந்த வாடிக்கையாளரின் திட்டமாக கூட இந்த சம்பவம் இருக்கலாம் என்றும் தாபா உரிமையாளர் கூறினார்.
தாபாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும் இந்த சம்பவத்தை போலி என்று நிரூபிக்க தங்களிடம் போதிய ஆதாரமில்லை என்று கூறினார். அதேநேரம் தங்களது உணவகத்தின் பெயரை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி இந்த சம்பவம் என்று தாபா உரிமையாளர் கூறினார்.
இருப்பினும், இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் தரப்பில் இதுவரை எந்த புகார் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் வாடிக்கையாளர் தங்களது தாபாவின் பெயரைக் களங்கப்படுத்த விரும்புவதால் அவர்கள் மீது புகார் அளிக்கப் போவதாக தாபாவின் உரிமையாளர் ஹனி தெரிவித்தார்.
இதையும் படிங்க : பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ... பாஜக பிரமுகரா? வைரல் வீடியோ!