ஜான்சி: உத்தரபிரதேச மாநிலம் உல்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண் மே 24ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தான் இளம்பெண் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதும் அம்பலமானது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், உல்தான் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
செல்போனில் இருவரும் பேசியதுடன், ரகசியமாக நேரிலும் சந்தித்து வந்தனர். இதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்த நிலையில், காதல் விவகாரம் கிராமம் முழுவதும் பரவியது. இதையறிந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், இளைஞரின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து உள்ளனர்.
ஆனால், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத இளைஞரின் குடும்பத்தினர், பெண்ணின் குடும்பத்தினருடன் சண்டையிட்டு உள்ளனர். இதையடுத்து இளம்பெண்ணை அவரது பெற்றோர் இனி வெளியே செல்லக் கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் வீட்டிலேயே இருந்த இளம்பெண், பின்னர் மீண்டும் தனது காதலனை தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
தற்கொலை நாடகம்: இந்நிலையில் கடந்த மே 24ஆம் தேதி வழக்கம் போல் காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய இளம் பெண்ணை, அவரது பெற்றோர் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, சடலத்தை சமையலறைக்கு கொண்டு சென்று தூக்கில் தொங்கவிட்டு மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் நாடகமாடியதாக கூறப்படுகிறது.
கொலை செய்தது அம்பலம்: ஆனால் உடற்கூராய்வின் போது இளம் பெண்ணின் கழுத்தில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் உடலின் பல்வேறு பாகங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது இளம்பெண்ணின் பெற்றோர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளனர்.
பின்னர், மகளை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் பெற்றோரை கைது செய்தனர். மகளை ஆணவக் கொலை செய்த வழக்கில், பெற்றோரின் நாடகம் அம்பலமான நிலையில், 10 நாட்களுக்கு பிறகு போலீசில் சிக்கி உள்ளனர்.