பார்மர்: ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் நெட்ராட் என்னும் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவரின் தந்தை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் குறித்து நேற்று (ஜூலை 6) சவுஹ்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் நெட்ராட் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நீர் அருந்துவதற்கு என்று தண்ணீர் பானை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 3) அன்று 12ம் வகுப்பு படிக்கும் எனது மகன் தாகத்தின் காரணமாக பானையில் இருந்து நீரை எடுத்து அருந்தியுள்ளான்.
அதனைக் கண்ட அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், எனது மகனை கடுமையான வார்த்தைகளில் திட்டி அடித்துள்ளார். 17 வயதே ஆன மாணவனை பள்ளியில் அனைவரும் பார்க்கும் வகையில், சமூகத்தின் பெயரைச் சொல்லி கடுமையான வார்த்தைகளில் ஆசிரியர் திட்டியுள்ளார். மேலும் ஆசிரியர் எனது மகனை கொடூரமாக தாக்கி அரைந்ததில், அவன் சுய நினைவை இழந்து தரையில் விழுந்துள்ளான்.
இதையும் படிங்க: போலி போலீஸை சுற்றி வளைத்த ரியல் போலீஸ்... நாமக்கல்லில் அரங்கேறிய திருட்டுச் சம்பவம்!
அதனைத் தொடர்ந்து எனது மகனுடன் உடன் படிக்கும் மாணவர்கள் சிலரும் மற்றும் அதே பள்ளியில் படிக்கும் எனது மகளும் இணைந்து அவனை காப்பாற்றியுள்ளனர். எனவே மாணவன் என்றும் பாராமல் சமூகத்தின் பெயரைக் கூறி இழிவாக பேசியும் அடித்தும் துன்புறுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் ஆசிரியர் அடித்தது குறித்து மாணவன் வீட்டில் தெரிவிக்க பயந்து கூறாமல் இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மறுநாள் வலி தாங்க முடியாத மாணவன் உண்மையைக் கூறவே மருத்துவ மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சவுஹ்தான் தொகுதி கல்வி அதிகாரி அம்ராராம் இந்த வழக்கை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் தற்போது வரை வழக்கு குறித்து காவல்துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரே கல்வி வளாகத்தில் வைத்து சமூக பாகுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி? - யார் யாரெல்லாம் தகுதியுடைவர்கள்?