புவனேஸ்வர்: இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்துவருகிறது.
இந்த தாழ்வுப்பகுதி மே 7ஆம் தேதி மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மே 8ஆம் தேதி மாலை புயலாக மாற வாய்ப்புள்ளது. அந்த வகையில் மே 10ஆம் தேதி வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையில் மையம் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, ஒடிசாவில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் ஜெனா கூறுகையில், "எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்கக்கூடிய வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 17 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் உடன் 20 மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள் இணைந்து தயார் நிலையில் உள்ளன. மேலும் உள்ளூர் காவல், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: தெற்கு அந்தமான் அருகே உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!