கட்டாக்: ஒடிசா தலைநகர் கட்டாக்கில் 63 வயதுடைய மினாதி பட்நாயக் என்பவர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று மாடிகள் கொண்ட குடியிருப்பை அவருக்கு உதவியாக இருந்த ரிக்சா ஓட்டுநருக்கும், அவரின் மனைவிக்கும் வழங்கியுள்ளார்.
மினாதி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ரிக்சா ஓட்டுநர் புத்தா சமலின் ரிக்சாவில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். தொடர்ந்து அவருடைய ரிக்சாவில் பயணித்த மினாதிக்கு, புத்தாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
25 ஆண்டுகால பந்தம்
இதனால், மினாதியின் குடும்பத்தினருடன், புத்தாவும் அவரின் மனைவி புத்தி சமலும் மிகுந்த நெருக்கமாகி உள்ளனர். மேலும், கடந்த 25 ஆண்டுகளாக மினாதியின் வீட்டிலேயே இருந்த வந்த புத்தா, தங்களின் கஷ்ட காலங்களில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து வாழ்ந்துள்ளனர்.
இது குறித்து, மினாதி, "புத்தாவின் ரிக்சாவில் பயணித்து, ஒருகட்டத்தில் எங்களுக்குள் இணக்கம் ஏற்பட்டுவிட்டது. முதலில், புத்தாவை இஸ்லாமியர் என எண்ணிவிட்டேன். ஒருநாள் நெற்றியில் குங்குமம் வைத்து வந்த பின்னர் அவர் இந்து என்று அறிந்துகொண்டேன். கடந்த 2020 ஜூலை எனது கணவரையும், இந்தாண்டு தொடக்கத்தில் எனது ஒரே மகளையும் இழந்துவிட்டேன்.
சொத்துகள் இரண்டாம்பட்சம்தான்
எனது மகளே சென்ற பிறகு, இந்தச் சொத்துகளை இருந்து எதற்கு?. எங்கள் குடும்பத்தினரும், புத்தாவின் குடும்பத்தினரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தோம். கடந்த ஆறு மாத காலம் அனைத்தையும் புரட்டிப்போட்டுவிட்டது" என மன வருத்தோடு தெரிவித்தார்.
குடும்பம் என்பது ரத்த உறவால் மட்டும் உருவாவது இல்லை. சிலநேரங்களில் துயரப்படும் ஒருவருடன் கைகோர்த்து ஆறுதலாக நிற்பவர்களும் குடும்பம்தான் என்பதை இந்தச் சம்பவம் உறுதிசெய்துள்ளது.
இதையும் படிங்க: 104 வயதிலும் தேர்வில் டாப்பர்: கோட்டயம் குட்டியம்மாவின் சாதனை