தலைநகர் டெல்லியில் தேசிய மாணவர் படையின் இயக்குநர் லெப். ஜெனரல் தருண் குமார் ஐச் பத்திரிகையாளர்களை இன்று (ஜன. 08) சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தேசிய மாணவர் படைச் சட்டத்தின் (National Cadet Corps Act of 1948) ஆறாவது பிரிவின்படி, திருநர் சமூகத்தினர் அதில் சேர முடியாத சூழல் நிலவுவது உண்மைதான்.
தற்போதுள்ள என்.சி.சி. விதிமுறைகளின்படி, ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தவரை மட்டுமே அதில் இணைக்க முடியும். ஆண், பெண் பாலினங்கள் குறித்து பேசும்போது, திருநர்களை அதில் சேர்ப்பதற்கான விதி தற்போது நம்மிடம் இல்லை.
2014ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில் திருநர்களுக்குச் சமூகத்தின் அனைத்திலும் சரிசமமான உரிமைகள் உண்டு. இருப்பினும், மூன்றாம் பாலினத்தவர்களை என்.சி.சி.யில் இணைக்க அதன் விதிகள் அனுமதிக்கவில்லை.
ஆண், பெண், திருநர் அல்லது எந்தவொரு அடிப்படையிலும் எதையும் நாம் அணுக வேண்டியதில்லை. மாற்றுப் பாலினத்தவரை இணைக்க ஒரு புதிய துணை அமைப்பை உருவாக்குவதற்கு முன் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் அது முற்றிலும் மாறுபட்ட இயக்கவியலைக் கொண்டிருக்கும்.
திருநர்களை இணைப்பது தொடர்பான முடிவென்பது, தேசிய அளவில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. அனைத்துச் சீருடை ஆற்றல்களையும் உள்ளடக்கியிருப்பதால் இது குறித்து உயர் அலுவலர்கள் மட்டத்தில் கலந்தாலோசனை, ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும். எனவே, இது பற்றி நான் எந்தவொரு கருத்தும் தெரிவிக்க முடியாது” என்றார்.
திருவனந்தபுரம் பல்கலைக்கழக மாணவி ஹினா ஹனீபா, தேசிய மாணவர் படையில் திருநர் சமூகத்தினரை இணைக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : கொங்கணி மொழிக்கு அகாதமி அமைக்க டெல்லி அரசு ஒப்புதல்!