பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக தண்டேலி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி காளி ஆறுக்கு அருகே தண்டேலி பகுதிகள் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்துகாணப்படுகின்றனர். குறிப்பாக, சுற்றுப்பயணிகளுக்காக காளி ஆற்றங்கையோரம் நீர் சாகச விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே காளி ஆற்றில் முதலைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதேபோல முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் முதலைகள் தாக்கியதில் 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் உள்ளூர் வாசிகளும், சுற்றுலாப்பயணிகளும் பீதியடைந்துள்ளனர். இப்பகுதியில் வாழும் மக்கள் காளி ஆற்றையும், அதன் கிளையாறுகளையுமே வழித்தடங்களாக பயன்படுத்திவருகின்றனர். இந்த சூழலில் இந்த தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் உடனடி நடவடிக்கை வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில், முதலை தாக்குதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காளி ஆற்றங்கரைக்கு மக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் செல்கிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும். முதலைகள் இருக்கும் பகுதிகள் என சில இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் செல்லக்கூடாது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீடியோ: விடமால் துரத்திய காட்டுயானை... 8 கி.மீ. ரிவர்ஸில் சென்ற பேருந்து...