பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் மெட்ரோவில் டிக்கெட் வாங்காமல் வெளிநாட்டு யூடியூபர் ‘ஃபிடியாஸ் பனயோட்’ என்பவர் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்ற யூடியூபர் ‘ஃபிடியாஸ் பனயோட்’ டிக்கெட் எடுக்காமல் எப்படி மெட்ரோவில் பயணிப்பது என்று பார்க்கலாம் என கூறிக்கொண்டு உள்ளே நுழைகிறார்.
அப்போது, அங்கிருந்த மற்ற பயணிகளிடம் இது குறித்து தெரிவிக்க, அவர்கள் டிக்கெட் எடுக்காமல் உள்ளே செல்ல முடியாது என கூறுகின்றனர். ஆனால், தான் எப்படி செல்கிறேன் என்று பாருங்கள் என கூறிக்கொண்டு மெட்ரோ நடைமேடைக்கு சென்று டிக்கெட் ஸ்கேனரிடம் சென்று டிக்கெட்டை ஸ்கேன் செய்யாமல் அந்த ஸ்கேனரை தாண்டி செல்கிறார்.
தொடர்ந்து மெட்ரோவில் ஏறிய அந்நபர், மெட்ரோவிற்குள் உள்ள கம்பிகளில் உடற்பயிற்சி செய்துவிட்டு, தான் இறங்கும் இடம் வந்துவிட்டதாக கூறி ரயிலில் இருந்து இறங்குகிறார். பின்னர், அங்கிருந்த வெளியேறும் ஸ்கேனரிடம் சென்று முன்னதாக செய்ததுபோல ஸ்கேனரை தாண்டி வெளியே சென்று, தான் இந்தியாவில் உள்ள மெட்ரோவில் இலவசமாக பயணித்ததாக கூறிவிட்டிச் செல்கிறார்.
இதனை அவர் தனது இஸ்டாகிராம் (Fidias0) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகவே பெங்களூர் மக்கள் அனைவரும் கொந்தளித்தனர். மெட்ரோ நிர்வாகத்தை ஏமாற்றி இந்தியா மெட்ரோவை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ள வெளிநாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது இன்ஸ்டா பக்கத்தில் கமெண்டுகள் குவிந்தன.
இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் அஞ்சும் பர்வேஸ் கூறுகையில், “வெளிநாட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பெங்களூரு மெட்ரோவில் இலவசமாக பயணித்த வீடியோ வைரலான நிலையில் எங்களது பார்வையில் அது தென்பட்டது. இதுபோன்ற குற்றச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காதல் மனைவியை கொலை செய்த கணவர்.. பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த பெண்.. நடந்தது என்ன?